ஏ.ஆர். ரஹ்மானுக்கு நடிகர், நடிகைகள் ஆதரவு...

ஏ.ஆர். ரஹ்மானுக்கு நடிகர், நடிகைகள் ஆதரவு...

'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளால், ஏ.ஆர்.ரஹ்மானை பலரும் விமர்சித்த வந்த நிலையில், நடிகர் மற்றும் நடிகைகள் அவருக்கு ஆதரவு அளித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமன்றி, அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் அனுமதிக்கப்பட்டதா? என விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தவிட்டுள்ளார். இதுமட்டுமன்றி, இசை நிகழ்ச்சியை காண முடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும், சமூக வலைதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்து பதிவிட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு அளித்து நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ரஹ்மானுக்கு ஆதரவு கரம் நீட்டியிருக்கும் நடிகர் கார்த்தி, இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.அதே போல, நடிகை குஷ்புவும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பிளாட்டினம் டிக்கெட் வாங்கிய தனது மகள்களும் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் அவதிப்பட்டதாகவும், ஆனால், அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பொறுப்பேற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதிருப்திக்கு முழுக்க முழுக்க நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்


 

இதேபோல, இயக்குநர் சீனு ராமசாமியும் அவரது டிவிட்டர் பக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

Share this story