'முபாசா: தி லயன் கிங்' படத்திற்கு குரல் கொடுத்த அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன்.. !
‘முஃபாசா: தி லயன் கிங்’ ஹாலிவுட் படத்தின் தமிழ் பதிப்புக்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன் உள்ளிட்டோர் குரல் கொடுத்துள்ளனர்.
கடந்த 1994-ல் ‘தி லயன் கிங்’ அனிமேஷன் திரைப்படம் வெளியானது. 2 ஆஸ்கர் விருதை இந்தப் படம் வென்றது. கடந்த 2019-ல் லைவ் ஆக்ஷன் திரைப்படமாக ‘தி லயன் கிங்’கின் ப்ரீக்வல் வெளியானது. இந்தப் படம் உலக அளவில் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்தது. அந்த வரிசையில் அடுத்ததாக ‘முஃபாசா: தி லயன் கிங்’ படம் வெளியாக உள்ளது. இந்தப் படம் முஃபாசா கதாபாத்திரம் குறித்து விரிவாக பேசுகிறது. இதனை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். வரும் டிசம்பர் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
இந்நிலையில் இந்த முபாஸா கதாபாத்திரத்திற்கு இந்தியில் ஷாருக்கான், தெலுங்கில் மகேஷ்பாபு டப்பிங் செய்துள்ளனர். தற்போது தமிழில் இந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் அர்ஜுன் தாஸ் டப்பிங் செய்ய உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசோக் செல்வன் டாக்கா கதாபாத்திரத்துக்கும் குரல் கொடுத்துள்ளனர். ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோனா கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளனர். கிரோஸ் கதாபாத்திரத்துக்கு நாசர், ரஃபிக்கி கதாபாத்திரத்துக்கு விடிவி கணேஷ் குரல் கொடுத்துள்ளனர்.
Hakuna ̶M̶a̶t̶a̶t̶a̶ ̶ Mufasa it is !🦁The new roar 🎵
— Arjun Das (@iam_arjundas) November 20, 2024
1 Month from now, get ready to watch Mufasa: The Lion King in cinemas from 20th Dec.#MufasaTheLionKing @DisneyStudiosIN pic.twitter.com/1xrA296KrS
இது தொடர்பாக அர்ஜுன் தாஸ் கூறுகையில், “முஃபாஸா: தி லயன் கிங் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது கனவு போல இருக்கிறது. நம் குழந்தைப் பருவ நினைவுகள் அனைத்திலும் தனி இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு கதாபாத்திரத்துக்கு குரல் கொடுப்பது பெருமையாக இருக்கிறது. சிறுவயதில், தி லயன் கிங் படத்தைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த பாக்கியம்” என தெரிவித்துள்ளார்.