‘தி லெஜண்ட்’ சரவணன் மாஸ் ஹீரோவா ஜெயித்தாரா ?.. விமர்சனம் இதோ !

சினிமாவில், ஒரு மாஸ் ஹீரோவாகுறதுக்கு முப்பது, நாப்பது வருச உழைப்பு வேணும்கிறதுதான் வரலாறு. ஆனால், ஒரே பாட்டில் ஹீரோவாகும் விக்ரமன் பட ஹீரோ மாதிரி, முதல் படத்துலயே 'மாஸ் ஹீரோ'வாக எண்ட்ரி கொடுக்க முயற்சித்திருக்கிறார் இந்தப் படத்தின் ஹீரோ(!) லெஜண்ட் சரவணன்.
நடிகர் சூர்யா, தங்கள் படத்துக்கு டேட் கொடுக்கலேன்னு சொன்னதால்… சும்மா இருந்த லெஜண்ட்டை உசுப்பேத்தி… ஜேடி-ஜெர்ரி இருவரும் 'சரவணா ஸ்டோர்ஸ்' விளம்பரம் எடுத்ததோட விளைவு இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது!
மருத்துவ துறையில் உள்ள மாஃபியாக்கள் பத்தி இதுவரைக்கும் லட்சம் கதை வந்திருக்கும். எளிமையாக இருக்கட்டுமேன்னு சர்க்கரை நோய் குறித்துப் பேசுகிற லட்சத்தில் ஒண்ணாவது படம் இது. உலகமே வியக்குற விஞ்ஞானி… ஏதாவது செஞ்சே ஆகணும்னு ஒத்தக்கால்ல நின்னு, மதுரைக்குப் பக்கத்துல இருக்கிற கிராமத்துக்கு வர்றார். வந்த இடத்தில் காதல்… காதலிக்கு பஞ்சாயத்து என முதல் பாகம் முழுக்க எண்பதுகளில் வந்த படங்களைத் திரும்ப பார்க்கிற மாதிரி ஒரு ஃபீலிங்.போதாக்குறைக்கு… தீபாவளி, பொங்கல் டைம்ல ரங்கநாதன் தெருவுக்கு வர்ற கூட்டம் மாதிரி எந்த ஃப்ரேம் வச்சாலும், கூட்டம் கூட்டமாகத்தான் ஆட்கள் வருகிறார்கள்! ஹீரோ சரவணன்தான் தூங்கும் போது கூட ஃபுல் மேக்கப்பும் கோட்டுமாக இருக்கிறார்ன்னு பார்த்தல், படத்துல வர்ற அத்தன பேரும் அப்படிதான் இருக்கிறார்கள்!
'மாஸ் ஹீரோ'ன்னு சொல்லியாச்சு என்பதால் இயக்குனர் இருவரும் பண்ணாங்களா இல்லை, ஹீரோவே லீட் எடுத்துக் கொடுத்தாரான்னு தெரியல.!? எம்.ஜி.ஆர், சிவாஜி,ரஜினி தொடங்கி… இப்பருக்கிற மாஸ் ஹீரோக்கள் பண்ணின சாங்ஸ், ஃபைட் சீக்வன்ஸ் அத்தனையையும் படம் முழுக்கப் பண்ணிப் பார்த்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.
ஃபைட் சீக்வன்ஸ்ல எல்லாம் பல இடங்களில் டூப் போட்டுத்தான் எடுத்திருக்கிறார்கள் என்றாலும், ஃபுல் எனர்ஜியாக இருக்கிறார். மற்றபடி படம் முழுக்க ஒரு ரோபோ மாதிரி ஒரேமாதிரியான எமோஷன்தான்! ஹாரிஸ் ஜெயராஜ் மியூஸிக் என்ற பெயரில் ஏற்கனவே ஹிட்டடித்த பாடல்களை எடுத்து நாலஞ்சு லேயரை மாற்றிப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், சில குழந்தைகள் ஆசைப்பட்டதுக்காக ஒரு நாள் கலெக்டராக சைரன் வச்ச கார்ல கூட்டிட்டுப் போவாங்களே…லெஜண்ட் ஆசைப்பட்டார் என்கிறதுக்காக எடுக்கப்பட்ட இன்னொரு விளம்பரப்படம்தான் இது!
- V.K.சுந்தர்