2026 இல் எத்தனை பேர்தான் அரசியலுக்கு வருவீங்க? டிமான்டி காலனி ஹீரோ கிண்டல்!

Arulnidhi

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'டிமாண்டி காலனி' பாகம் 2 திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. டிமாண்டி காலனி முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.இந்நிலையில் கோவையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அஜய் ஞானமுத்து, ”இந்த திரைப்படம் அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் நான்கு பாகங்களாக வெளிவரும். மேலும் இந்த படம் வழக்கமான பேய் படங்களை போல் அல்லாமல் புதுவித அனுபவத்தை கொடுக்கும் எனவும், திரையரங்குகளுக்கு சென்று பார்த்தால் அந்த அனுபவத்தை உணர முடியும் எனவும் தெரிவித்தார்.

Arulnidhi

இதனைத்தொடர்ந்து பேசிய அருள்நிதி, டிமாண்டி காலனி முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த பாகம் நல்ல வரவேற்பை பெறும். படத்தில் கிராஃபிக்ஸ் நன்றாக வந்துள்ளது. எனக்கு முதல் பாகம் திரை வாழ்வில் திருப்புனையாக அமைந்தது. அதேபோல் இயக்குநர் அஜய் ஞானமுத்துவுக்கும் அப்படம் முக்கியமானதாக அமைந்தது.

தற்போது இந்த படத்தையும் அஜய் ஞானமுத்து நம்பிக்கையோடு உருவாக்கியுள்ளார். டிமாண்டி காலனி முதல் பாகத்தில் இடைவேளை, கிளைமாக்ஸ் பெரும் பாராட்டை பெற்றது. அதேபோல் இந்த பாகத்திலும் இடைவேளை, கிளைமாக்ஸ் காட்சிகள் வரவேற்பை பெறும் என்றார். 2026இல் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, 2026இல் எத்தனை பேர்தான் அரசியலுக்கு வருவீர்கள். அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம். நான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை” என்று அருள்நிதி கூறினார்.

Share this story