அருண் விஜய்யின் ‘தடையறத் தாக்க’ ரீ ரிலீஸ்.. எப்போ தெரியுமா?

அருண் விஜய் நடிப்பில் கடந்த 2012ல் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த “தடையறத் தாக்க” திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளது.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், 2012 ஆம் ஆண்டு வெளியான படம் “தடையறத் தாக்க”. இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள் தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். எல். ஆர் ஈஸ்வரி பாடிய " பூந்தமல்லி டா புஷ்பவள்ளி டா பாடல் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
திரில்லர் ஜானரில் மைல்கல்லாக இன்றளவும் கொண்டாடப்படும் இப்படத்தினை, UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன், விரைவில் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடவுள்ளது.
இந்திய அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த படம் தடையறத் தாக்க. இப்படம் நடிகர் அருண் விஜய் திரைவாழ்வில், மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் ஏற்படுத்தி தந்தது. இந்த படம் தான், இயக்குநர் மகிழ் திருமேனியின் அடையாளமாக அமைந்து இன்று நடிகர் அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை இயக்கும் அளவிற்கான வாய்ப்பையும் பெற்றுத்தந்தது.
வாழ்க்கையில் கஷ்டபட்டு ஒரு நல்ல நிலைக்கு முன்னேறிய இளைஞன், ஒரு சிறு உதவி செய்யபோக, மிகப்பெரிய ரௌடிகளின் கூட்டத்திடம் மாட்டிக் கொள்கிறான். அவன் அந்த ரௌடிகளிடமிருந்து தப்பினானா என்பது தான் இந்தப்படத்தின் கதை. இசையமைப்பாளர் தமனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பைக் குவித்தது.
ஒரு ஆக்சன் படத்திற்கான மொத்த இலக்கணங்களை மாற்றியமைத்து, ரசிகர்களை இறுதிவரை இருக்கை நுனியில் அமர வைத்த இப்படம், திரைக்கு வந்தபோதே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இப்போதும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆக்சன் கிளாசிக்காக கொண்டாடப்படுகிறது.
இப்படம் தற்போது நவீன ஏஐ தொழில் நுட்பத்தில் முழுப்படமும் மெருக்கேற்றப்பட்டு, 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன், புதிய டிஜிட்டல் பதிப்பாக, UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.