தம்பிக்காக, கைவிடப்பட்ட பழைய படத்தை மீண்டும் கையிலெடுக்கும் ஆர்யா!?
ஆர்யா நடிப்பில் கடைசியாக சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. அதையடுத்து ஆர்யாவின் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மணை 3 படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷாலுடன் எனிமி படத்திலும் நடித்து முடித்துள்ளார். இரு படங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் அவர் மகாமுனி இயக்குனர் சாந்தகுமார் மற்றும் டெடி இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன் ஆகியோர் இயக்கத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆர்யா தான்சில ஆண்டுகளுக்கு முன்பு நடித்து நின்றுபோன படத்தை மீண்டும் துவங்க தீவிர முயற்சி எடுத்து வருவதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமீர் இயக்கத்தில் ஆர்யா சந்தனத்தேவன் என்ற படத்தில் நடித்து வந்தார். பல நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் படத்தின் பட்ஜெட் எகிறியதால் அப்படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் படத்தை மீண்டும் துவங்கும் முயற்சியில் இருக்கிறாராம் ஆர்யா.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அந்தப் படத்தை மீண்டும் துவங்கும் வகையில் படத்தைப் பொறுப்பெடுத்து தயாரிக்க முன்வந்திருக்கிறதாம். சார்பட்டா படத்தின் மூலம் ஆர்யாவின் மார்க்கெட் உயர்ந்திருக்கிறது. எனவே பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் ஆர்யாவை வைத்து படம் தயாரிக்க முன்வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் கைவிடப்பட்ட படத்தை மீண்டும் கையில் எடுக்க முனைப்பு காண்பித்து வருகிறார். அதற்கு அவர் தம்பி தான் காரணமாம்.

ஆர்யாவின் தம்பி சத்யா புத்தகம், அமரகாவியம் என சில படங்களில் நடித்தும் பெரிதாகக் கவனம் பெறவில்லை. சத்யா, ஆர்யாவுடன் சந்தனதேவன் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே அப்படம் வெளியானால் சத்யாவுக்கு திரைத்துறையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
விரைவில் நல்ல செய்தி வெளியாகலாம்!

