நாளை தியேட்டர்களில் வெளியாக உள்ள தமிழ் படங்கள் என்னென்ன?

New movie

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றது. கடந்த வாரம் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் வெளியாகவுள்ள தமிழ்ப்படங்கள் குறித்து காணலாம்

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. விஜய் ஆண்டனியின் சமீபத்திய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மழை பிடிக்காத மனிதன் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர் மறைந்ததை தொடர்ந்து சத்யராஜ் அந்த வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட நாட்களாக ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில், நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு வழங்க, ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸூடன் இணைந்து மசாலா பாப்கார்னின் ஐஸ்வர்யா. எம் & சுதா. ஆர் ஆகியோர் தயாரித்துள்ள படம் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’. நட்பின் சாரத்தை வசீகரமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லும் படமாக எடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் லீலா, குமரவேல், விசாலினி, ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், இர்பான், வில்ஸ்பாட், தேவ், கேபி பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, மற்றும் தங்கதுரை ஆகியோருடன் வெங்கட் பிரபுவும், ஐஸ்வர்யாவும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

New movie

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், புலி உள்ளிட்ட படங்களை இயக்கிய சிம்புதேவன் இயக்கியுள்ள படம் ’போட்’. முழுக்க முழுக்க நடுக்கடலில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நடக்கும் கதையாக சிம்புதேவனுக்கே உண்டான அரசியல் கதையாக உருவாக்கப்பட்டுள்ள போட் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜமா’. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், மணிமேகலை, வசந்த் மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தெருக்கூத்து கலைகளில் பல குழுக்கள் இருக்கும் நிலையில் அதில் ஒரு குழுவினரை 'ஜமா' என அழைக்கின்றனர். அவர்களின் தெருக்கூத்து மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சவால்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தை விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற 'கூழாங்கல்' படத்தை தயாரித்த லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் நகுல் நடித்த வாஸ்கோடகாமா, பேச்சி ஆகிய படங்களும் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

Share this story