'பாகுபலி' பட நடிகருக்கு சத்தமில்லாமல் நடந்து முடிந்த திருமணம்..
விஜய் நடித்த ’போக்கிரி’, அஜித் நடித்த ’பில்லா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர், 47வது வயதில் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழில் விஜய் நடித்த ’போக்கிரி’, அஜித் நடித்த ’பில்லா’ உள்பட சில படங்களில் நடித்தவர் நடிகர் சுப்புராஜ். இவர் ‘பாகுபலி’ திரைப்படத்தில் அனுஷ்காவின் மாமா கதாபாத்திரத்தில் கோழையாக இருந்து, அதன்பின் வீரம் மிக்கவராக மாறி மரணம் அடையும் காட்சியில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் சுப்புராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். தொடர்ந்து சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், 47 வயதான சுப்புராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். இதனை தொடர்ந்து, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சுப்புராஜின் மனைவியின் பெயர் ஷ்ரவந்தி என்றும், அவர் பல் டாக்டர் என்றும் கூறப்படுகிறது. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"திருமணம் என்பது தானாகவே நடக்க வேண்டும்; சமூக அழுத்தம் மற்றும் வயது அதிகரிப்பதற்காக அதை செய்யக் கூடாது. திருமணம் எப்போது அமையும், அப்போது செய்து கொள்வேன்," என அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டியில் நடிகர் சுப்புராஜூ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.