பிகில் கதை திருட்டு வழக்கு; அட்லீ, அர்ச்சனா கல்பாத்தி பதிலளிக்க உத்தரவு!
நடிகர் விஜய் நடித்த 'பிகில்' கதை திருட்டு தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, பட இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் தனது கதை என அம்ஜத் மீரான் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது அந்த மனு நிலுவையிலிருந்த போது, கூடுதல் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அனுமதி கோரி அம்ஜத் மீரான் 2023-ல் மூன்று மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, இயக்குநர் அட்லி, ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் அதன் செயல் இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் வழக்குச் செலவாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின்படி, குறிப்பிட்ட காலத்தில் வழக்கு செலவுத்தொகை செலுத்தப்படாததால், அம்ஜத் மீரான் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். தற்போது, இந்த உத்தரவை எதிர்த்து அம்ஜத் மீரான் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதுவும், மேல் முறையீடு செய்வதற்கான கால அவகாசத்தைத் தாண்டி 73 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால் தாமதத்தை ஏற்றுக் கொள்ளவும் கோரப்பட்டிருந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது தாமதத்தை ஏற்றுக் கொண்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.