"துருவ் விக்ரமுக்கு விருதுகள் கிடைக்கும்"-பைசன் பட விமர்சனம்

Mari selvaraj
இயக்குனர் மாரி செல்வராஜ் திரைப்படமாக எழுதி இயக்கியுள்ள பைசன் படத்தின் விமர்சனம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
சொந்த ஊரிலுள்ள கபடி அணியினராலேயே புறக்கணிக்கப்படும் துருவ் விக்ரம், கபடிதான் உயிர்மூச்சு என்று வாழ்கிறார். இந்திய அணி சார்பில் விளையாடி ஜெயிக்க வேண்டும் என்ற அவரது லட்சியத்துக்கு தந்தை பசுபதி முட்டுக்கட்டை போடுகிறார். அக்கா ரஜிஷா விஜயனும், விளையாட்டு ஆசிரியர் ‘அருவி’ மதனும் துருவ் விக்ரமுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
இந்நிலையில், தங்கள் சமூக உயர்வுக்காக அமீர், லால் கோஷ்டி கடுமையாக மோதிக்கொள்கின்றனர். அவர்களுக்கு மத்தியிலும், விளையாட்டு துறையில் நடக்கும் சூழ்ச்சியிலும் சிக்கி சின்னாபின்னமாகும் துருவ் விக்ரம், ஜப்பானில் நடக்கும் கபடி போட்டியில் இந்திய அணி சார்பில் வெல்லும் கடினமான போராட்டமே படமாகியுள்ளது. 1990களில் கதை நடக்கிறது. மணத்தி கணேசனின் போராட்டங்களை உள்வாங்கி, கிட்ணாவாகவே வாழ்ந்துள்ளார் துருவ் விக்ரம். தென்மாவட்ட கதைக்களத்தில், சாதிய கலவரத்தில் சிக்கித்தவிக்கும் மனவலியை தனது முகத்திலும், பாடிலாங்குவேஜிலும் அற்புதமாக கொண்டு வந்திருக்கும் அவர், சண்டைக்காட்சிகளில் உயிரை பணயம் வைத்து ‘அடி’த்திருக்கிறார்.
அனுபமா பரமேஸ்வரனுடனான காதல் காட்சிகளில் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அக்காவின் ஆறுதல் வார்த்தைக்கு சந்தோஷப்பட்டு, சாதிய வன்முறையில் பொங்கியெழுந்து, அடக்கி ஒடுக்கப்பட்ட துறையில் விஸ்வரூபம் எடுத்து, ஒரு கம்ப்ளீட் ஆக்டராக அட்டகாசம் செய்துள்ள துருவ் விக்ரமுக்கு விருதுகள் கிடைக்கும். ‘என் மகன்’ என்று விக்ரம் பெருமைப்படலாம்.

Share this story