“அரைத்த மாவையே அரைக்காதீங்க…”- சேரனுக்கு கடிதம் எழுதிய ப்ளூ சட்டை மாறன்.

photo

காதல், சமூக பிரச்சனை என தனது படைப்புகள் மூலமாக மக்களை மகிழ்வித்தவர் இயக்குநர் சேரன். இவர் இயக்குநர் என்பதை கடந்து ஒரு மிகச்சிறந்த நடிகரும் கூட. 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த இயக்குநராக வலம்வந்த இவர் கடைசியாக இயக்கியது கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘திருமணம்’ எனும் படம். அதன்பிறகு தற்போது 4ஆண்டுகள் கழித்து கன்னடத்தில் கிச்சா சுதீப்பை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இயக்குநர் சேரனுக்கு பிரபல சினிமா விமர்சகரான ப்ளுசட்டை மாறன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,” தலைமகன், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, மாயக்கண்ணாடி, ஆடும் கூத்து, பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை, பொக்கிஷம், மூன்றுபேர் மூன்று காதல், முரண், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, திருமணம், ராஜாவுக்கு செக், ஆனந்தம் விளையாடும் வீடு.

photo

 மொத்தம் 13 படங்கள். இவற்றில் சிலவற்றில் நீங்கள் இயக்குனர், எழுத்தாளர் அல்லது தயாரிப்பாளர். பலவற்றில் நீங்கள் கதையின் நாயகன், நாயகர்களில் ஒருவர் அல்லது முக்கியமான கெஸ்ட் ரோல் செய்துள்ளீர்கள்,

* யுத்தம் செய், சென்னையில் ஒருநாள் போன்றவை சுமாரான/நல்ல வெற்றியை பெற்றிருக்கலாம்.

* ஆனால் மற்ற 13 படங்களும் வசூல் ரீதியில் வெற்றியா தோல்வியா என்பது உங்களுக்கும், மக்களுக்கும் நன்கு தெரியும்.

 * மேற்குறிப்பிட்டவற்றில் சில படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றிருக்கலாம் அல்லது விருதுகளை வென்றிருக்கலாம், ஆனால் இவற்றுக்கு முன்பு நீங்கள் இயக்கிய அல்லது நடித்த படங்களைப்போல இவையெல்லாம் வசூலில் சோபிக்காமல் போனதற்கு காரணங்கள் பின்வருமாறு:

* தயாரிப்பாளராக, இயக்குனராக,  தரமான படைப்பை தேர்வு செய்து இருந்தாலும்.. (வெகுஜன) மக்களின் ரசனையோடு ஒத்துப்போகுமா என்பது தெரியாமல் நீங்கள் இன்றுவரை இருந்து வருவது.

 * நடிகராக நீங்கள் செய்து வருவதும் இதையேதான்.

 * கடைசியாக நல்ல விமர்சனம், வசூல், தேசிய விருது என மூன்றையும் ஏகபோகமாக பெற்ற படம் தவமாய் தவமிருந்து, வெளியான ஆண்டு 2005. ஆக.. தற்போது வரை 18 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

* ஒரு படைப்பாளி அல்லது நாயகனின் ஒருசில படங்கள் வசூலில் தோற்பது இயல்பு அல்லது சில ஆண்டுகள் தேக்கநிலை ஏற்படவும் செய்யும். ஆனால் 18 ஆண்டுகள் இப்படியே தொடர்கிறது என்றால்?

 * எக்காரணம் கொண்டும் மக்களின் ரசனையை தவறென்று சொல்லி விட வேண்டாம்.

* அவர்களின் ரசனை மேம்பட்டு இருந்ததால்தான் பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்களுக்கு திரையரங்கில் ஆதரவு தந்தனர்,

 * தேசிய கீதம், பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, மாயக்கண்ணாடி போன்றவை பெரிதாய் வசூலை ஈட்டவில்லை என்றாலும் இன்றுவரை விமர்சகர்கள் மற்றும் மக்களால் பேசப்படும் படைப்புகளாக உள்ளன.

 * 'எனக்கு பெரிய ஹீரோக்கள் கால்ஷீட் தருவதில்லை' என்கிறீர்கள். விஜய் முதல் விஜயசேதுபதி வரை சில பெயர்களை குறிப்பிட்டு வந்தீர்கள். நீங்கள் இயக்கும் படத்திற்கு.. உங்களை விட பெரிய ஹீரோ யாருமே தேவையில்லை என்பதே உண்மை.

* பெரிய ஹீரோக்கள் இல்லாவிட்டால் படம் வியாபாரம் ஆகாது. அப்படியே ஆனாலும் அது ஓடாது என்பது கட்டுக்கதை. அதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு. அவற்றில்  சிலவற்றை மற்றும் குறிப்பிடுகிறேன். இவையெல்லாம் சிறிய பட்ஜெட்டில் அல்லது சிறிய ஹீரோக்கள் நடித்த படங்கள்தான்.

 * லவ் டுடே, குட் நைட், டாடா, போர்த்தொழில்.

 * மட்டமான மசாலா படங்களை மட்டுமே தற்போது மக்கள் பார்க்கிறார்கள். சிறிய படங்களை காண தியேட்டருக்கு வருவதில்லை என்று சொல்லும் பொய்யை இந்தப்படங்கள் முறியடித்துள்ளன. ஆகவே அந்த பழியையும் மக்கள் மேல் போட்டுவிட இயலாது. இந்த நான்கும்.. இரண்டாம் தர மசாலா படங்கள் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

 * ஆகவே இந்த 18 ஆண்டுகளில் உங்களது 13 படங்களும் வசூலில் அடைந்த ரிசல்டிற்கு இயக்குனர், தயாரிப்பாளர் அல்லது நடிகராக உங்களது கதை/திரைக்கதை தேர்வுகளே காரணம்.

* தற்போது வெளியாகியுள்ள தமிழ்க்குடிமகனின் பாக்ஸ் ஆபீஸ் ரிசல்ட் விரைவில் தெரிந்து விடும்.

* அடுத்ததாக கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து நீங்கள் இயக்கப்போகும் அதிரடி ரத்தக்காவியம் மக்களிடையே எப்படியான ஆதரவைப்பெறும் என்பதை காலம் தீர்மானிக்கும்.

* நீங்கள் வெற்றிபெற வேண்டுமென்பதே அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பம். அதற்கு தகுந்த படைப்பை தர வேண்டியதும் நீங்கள் மட்டுமே,

 * இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற பழம் பெருமைகளை மக்கள் பேசிக்கொண்டு இருக்க வேண்டும்.கேட்டதையே திரும்பத்திரும்ப அதே மக்கள் கேட்க வேண்டும்?

 * குறைந்தபட்சம் ஒரே ஒரு தரமான வெற்றிப்படத்தை தியேட்டர் ரிலீஸ் மூலம் தந்து அதைப்பற்றி பேச வையுங்கள்.

* கிச்சாவை வைத்து நீங்கள் இயக்கும் படம் தரமானதா என்று தெரியாது. அட்லீஸ்ட்வெற்றியையாவது பெற வாழ்த்துகள்." என தெரிவித்துள்ளார்.


 

Share this story