“என்னுடைய இரண்டு ஆசையும் லப்பர் பந்தால் நிறைவேறிவிட்டது” - ஹரிஷ் கல்யாண்
அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘லப்பர் பந்து’. தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன், டி.எஸ்.கே. உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 20ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் தமிழரசன் பச்சமுத்து, ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, டி.எஸ்.கே. உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், “பொதுவா எல்லா பட ரிலீஸூக்கு முன்பும் ஒரு பிரஸ் மீட் நடக்கும். ஆனால் ரிலீஸூக்கு பின்பு நன்றி தெரிவிக்கும் விழா நடக்குமா எனத் தெரியாது. ஆனால் எங்கள் டீம் பிரஸ் மீட் வைக்காமல், நன்றி தெரிவிப்பு விழாவை வைத்துள்ளோம். இது ரொம்பவும் எனக்கு ஸ்பெஷலான மேடை. ரொம்ப நாளா ஒரு வெற்றிக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அதை கொடுத்த மக்களுக்கு ரொம்ப நன்றி. ஒரு படத்தின் வெற்றியைத் தாண்டி எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம் என்னனா, நான் தியேட்டர் விசிட் பண்ணும்போது ரசிகர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டு டபுள் ஹாப்பியாக இருப்பதாக சொன்னதுதான். இதைத்தான் நான் ரியல் சக்சஸா நினைக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் இயக்குநர் தான். அவருக்கு நான் பிரதர் மாதிரியெல்லாம் இல்லை பிரதர் தான். அந்தளவிற்கு கதையை நல்லா எழுதியிருந்தார். அதனால்தான் என்னால் நல்ல விதத்தில் நடிக்க முடிந்தது.
இந்த படம் ஹிட் ஆகும் என நம்பிக்கை இருந்துச்சு. ஆனால் இப்படி கொண்டாடுவாங்கனு எதிர்பார்க்க வில்லை. இதற்கான கிரெடிட் எங்களோட கேப்டன் தமிழுக்கு தான் போய் சேரும். ரொம்ப நாளா கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்திலும் கிராமத்து கதையிலும் நடிக்க வேண்டும் என ஆசை. இந்த இரண்டும் லப்பர் பந்து படத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி. இந்த படத்தின் இயக்குநர் தமிழ் கேப்டன் விஜயகாந்த்தின் வெறித்தனமான ரசிகர். எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். கேப்டனின் ஆசீர்வாதம் எங்களுடன் இருப்பதை மக்கள் இந்த படத்தை கொண்டாடுவதை பார்க்கும்போது தெரிந்தது. இங்கு வருவதற்கு முன்பு அவரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டுத்தான் வந்தோம். இந்த நேரத்தில் கேப்டனின் குடும்பத்தினருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். என் அப்பா அடிக்கடி எல்லா விஷயத்தையும் மனசுக்கு எடுத்துட்டு போகாதனு சொல்லுவாரு. ஆனால் இந்த தருணத்தை என் மனசுல பொக்கிஷமா வச்சுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இந்த படத்தை கொண்டாடிய எல்லோருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியடைந்தார்.