சேரி குறித்த சர்ச்சை கருத்துக்காக பிரிகிடா சார்பில் மன்னிப்பு கேட்டுள்ள பார்த்திபன்!
சேரி குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு நடிகை பிரிகிடா மற்றும் பார்த்திபன் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
பிரபல இயக்குனர் பார்த்திபன் தற்போது உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்ற சோதனை முயற்சியில் 'இரவின் நிழல்' படத்தை உருவாக்கியுள்ளார். தற்போது இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பார்த்திபனின் இந்த வெற்றிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் நடிகை பிரிகிடா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். தற்போது இந்த படம் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகை பிரிகிடா சமீபத்தில் சேரி குறித்து தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் "18 வயதுக்குட்பட்டோர் பார்க்க வேண்டிய படங்களை அனைவரும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்தப் படத்தில் அவ்வளவு கெட்ட வார்த்தை இருக்கக் கூடாதுதான். இந்த படத்தின் கதைப்படி, ஒருவனுக்கு கெட்டது மட்டுமே நடந்துள்ளது. அதனால் அவனது வாழ்க்கையை அப்படிதான் சொல்லமுடியும். ஒரு சேரிக்கு போனால் கெட்ட வார்த்தைகள் மட்டுமே கேட்க முடியும். இதை சினிமாவிற்காக ஏமாற்றமுடியாது. மக்களுக்கே தெரியும் அங்கு போனால் எப்படி பேசுவாங்கன்னு. அதை தவிர்க்கவே முடியாது. கதைக்காக அப்படி திரைப்படம் உருவாகியுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பலர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பிரிகிடா வெளியிட்டுள்ள பதிவில் "மனமார்ந்த மன்னிப்பு!
இரவின் நிழல் படத்தில் இடம் மாறும்போது, மொழியும் மாறுகிறது என்பதைத் தெரிவிக்க முயற்சித்தேன். நான் ஒரு தவறான உதாரணத்தை எடுத்துக்கொண்டேன், அதைச் சொன்னதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் சினிமா துறையில் சாதிக்க முயற்சிக்கும் ஒரு சாதாரண பெண்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பார்த்திபனும் பிரிகிடா சார்பாக மன்னிப்பு கேட்டுள்ளார். "Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே!" என்று தெரிவித்துள்ளார்.

