இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப் பதிவு

ram gopal varma

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் ராம் கோபால் வர்மா. இவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிடுவது மற்றும் நிகழ்ச்சிகளில் நடந்துகொள்வது அவ்வப்போது சர்ச்சைகளாக மாறியுள்ளது. அந்த வகையில் முன்னதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டது தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நரா லோகேஷ், மருமகள் ப்ராமினி மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து வெளியிட்டிருந்தார். இதை அவர் இயக்கிய வியூகம் பட புரொமோஷனுக்காக பதிவிட்டதாக கூறப்படுகிறது. 

வியூகம் படம் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ரெட்டி மறைவு குறித்தும் அதன் பிறகு அவர் உருவாக்கிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி எப்படி வழிநடத்துகிறார் என்பதை பற்றியும் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கடந்த மார்ச்சில் வெளியானது. அப்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. 

இந்த நிலையில் ராம் கோபால் வர்மா மீது தெலுங்கு தேச கட்சியின் மண்டல செயலாளர் ராமலிங்கம் புகார் கொடுத்துள்ளார். அவர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நற்பெயருக்கு கலங்கம்ஏற்படுத்தும் விதமாக பதிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மடிப்பாடு காவல் நிலையத்தில் ராம் கோபால் வர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.   

முன்னதாக 2019ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா, ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி.ஆரை பற்றி ‘லக்‌ஷ்மி என்.டி.ஆர்’(Lakshmi's NTR) என்ற தலைப்பில் படம் இயக்கியிருந்தார். இப்படம் என்.டி.ஆரின் இரண்டாவது மனைவி பார்வையில் எடுக்கப்பட்டிருந்தது கடும் விமர்சனங்களை சந்திருந்தது. இதனால் ராம் கோபால் வர்மா ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆதரவாளராகவே அறியப்பட்டார். இப்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story