சூதாட்ட செயலி விளம்பரம் : நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரக்கொண்டா மீது வழக்குபதிவு

தெலங்கானா ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் காவல் நிலையத்தில் நடிகர்கள் ரானா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரக்கொண்டா உள்ளிட்ட 25 நபர்கள் மீது சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதற்காக கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபர் ஃபனீந்திர சர்மா என்பவர் புகார் கொடுத்ததன் பேரில் ரானா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரக்கொண்டா உள்ளிட்ட 25 நபர்கள் மீது சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதற்காக ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் கொடுத்த புகாரில் திரை பிரபலங்களும் சோசியல் மீடியா செல்வாக்காளர்களும் சூதாட்ட செயலியை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி அதில் முதலீடு செய்ய ஊக்குவிக்கின்றனர். இதனால் அந்த செயலியில் பலர் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கை தொடர்பாக காவல் துறையினர் பேசுகையில், “திரை பிரபலங்களும் சோசியல் மீடியா செல்வாக்காளர்களும் வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தி இதில் பணம் சம்பாதிக்கலாம் என்று பொய்யான நம்பிக்கைகளை அளிக்கிறார்கள்.
யாரும் சட்டவிரோதமாக சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தக்கூடாது. இளைஞர்களை தவறாக வழிநடத்தும் வகையில் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.