ஜீவா சொன்னதை மறுத்து கேள்வி எழுப்பிய சின்மயி

jeeva
தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ஜீவா வருகை தந்தார். அப்போது ஜீவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் மற்றும் ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "இது உண்மையில் மிகவும் தவறானதுதான். எல்லா துறைகளிலும் இதுபோல் நடக்கிறது. முன்பு 'மீ டூ' (Me Too) மூலம் பலர் தங்களுக்கு நடந்த பிரச்சினைகளை சொன்னார்கள். தற்போது மீண்டும் அதே போல் ஒரு விஷயம் நடக்கிறது. சினிமாவில் ஆரோக்கியமான சூழல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். " என்றார். மீண்டும் அதைப்பற்றியே கேட்டதால் ஜீவா கோபமாகி கேள்வி கேட்ட செய்தியாளரிடம் நான் அதற்கு ஏற்கனவே பதிலளித்து விட்டேன். இந்த விஷயம் கேரள சினிமாவில்தான் நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுப்போல் பிரச்சனை கிடையாது" என தெரிவித்தார். இவர் இப்படி கூறியது இப்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரபல பாடகியான சின்மயி ஜீவாவிடம் அவரது எக்ஸ் தளத்தில் " எப்படி நீங்கள் தமிழ் திரையுலகத்துறையில் பாலியல் சீண்டல்கள் இல்லை என்று கூற முடியும்" என கேல்வி எழுப்பியுள்ளார். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story