என்ன ஆனாலும் இனி அரசியலுக்கு ‘நோ’ - சிரஞ்சீவி உறுதி

வாழ்நாள் முழுவதும் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று நடிகர் சிரஞ்சீவி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
பிரம்மானந்தம் அவரது மகனுடன் நடித்துள்ள ‘பிரம்மா ஆனந்தம்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி, இயக்குநர் நாக் அஸ்வின் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். அதில் தனக்கும் பிரம்மானந்தத்திற்கும் இருக்கும் நட்பு குறித்து பேசினார் சிரஞ்சீவி.
மேலும், தனது பேச்சில் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார். அரசியல் குறித்து சிரஞ்சீவி பேசுகையில், “வாழ்நாள் முழுவதும் இனி அரசியலில் இருந்து விலகியிருக்கவே போகிறேன். அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு திரைப்படத் துறைக்கான தேவைகளுக்காக மட்டுமே. அரசியலில் இருந்து விலகி இனி சினிமாவில் மட்டுமே என் முழு கவனம் இருக்கும்.
மீண்டும் அரசியலுக்கு வரவிருப்பதாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், என் ரசிகர்களுக்காகவும் படங்களுக்காகவும் மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளேன். எனது இலக்குகள் அனைத்துமே பவன் கல்யாணால் நிறைவேற்றப்படும்” என்று குறிப்பிட்டார் சிரஞ்சீவி. இந்தப் பேச்சு ஆந்திராவில் திரையுலகினர் மத்தியில் மட்டுமன்றி அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
2008-ம் ஆண்டு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் தொடங்கி, சினிமாவில் இருந்து விலகினார் சிரஞ்சீவி. பின்பு 2011-ம் ஆண்டு தனது கட்சியினை காங்கிரஸ் கட்சியோடு இணைத்தார். 2018-ம் ஆண்டு பல்வேறு பதவியில் இருந்தார் சிரஞ்சீவி. அதனைத் தொடர்ந்து முழுமையாக அரசியலில் இருந்து விலகி, சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவரது கட்சியில் இளைஞரணி தலைவராக இருந்த பவன் கல்யாண், தனியாக ஜனசேனா கட்சியைத் தொடங்கி தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வராக இருப்பது குறிப்பிடத்தக்கது.