'கலர்ஸ் ஆஃப் கோலிவுட்' : சர்வதேச ஆவணப்படம் & குறும்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ தேர்வு..!
சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் 4ம் ஆண்டு இளநிலை விஷுவல் ஆர்ட்ஸ் (பிவிஏ - BVA) மாணவர்கள் உருவாக்கி உள்ள ஆவண குறும்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவின் (IDSFFK) அதிகாரப்பூர்வ பட்டியலில் சிறு குறும்படதிற்கான போட்டியில் இடம்பிடித்துள்ளது.
'கலர்ஸ் ஆஃப் கோலிவுட் - எ மெலனின் டெஃபிசியன்ஷி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பெங்களூரைச் சேர்ந்தவரான பாரோ சலில் இயக்கியுள்ளார். இருபது வயதே ஆன அவரும் அவரது கல்லூரி குழுவினரும் ஐந்தாவது செமஸ்டர் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆவணப்படம் பற்றி பரோ சலில் கூறுகையில், "வெள்ளை சருமத்தின் மீதான விருப்பம் இந்தியர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ளது, தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுடனான உரையாடல் மூலம், எங்கள் ஆவணப்படம் இதை ஆய்வு செய்கிறது. குறிப்பாக தமிழ் நடிகைகள் குறித்து இது பேசுகிறது," என்றார். 'கலர்ஸ் ஆஃப் கோலிவுட் - எ மெலனின் டெஃபிசியன்ஷி' படம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உருவாக்கபட்டுள்ளது.