தவெக தலைவர் விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..

இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்திய தவெக தலைவர் விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரை கொடுத்து விட்டு தமிழ்நாடு சுன்னத் ஜமாத்தின் மாநில பொருளாளர் செய்யது கவுஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
"தவெக சார்பில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இஃப்தார் நிகழ்ச்சியில் நோன்புக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத குடிகாரர்களும், ரவுடிகளும் கலந்து கொண்டது இஸ்லாமியர்களை கேவலப்படுத்தியதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் உணருகிறது. பண்படுத்துவதற்காக நடத்தப்படும் இஃப்தார் போன்ற நிகழ்ச்சி புண்படுத்தும் விதமாக நடந்தேறியுள்ளது. நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதத்திற்கு கொஞ்சமும் வருத்தம் கூட தெரிவிக்காத விஜய் மனிதத்தன்மையற்ற நபரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே விக்கிரவாண்டியில் த.வெ.கவின் முதல் மாநில மாநாட்டில் எவ்வித சரியான முறையில் முன் ஏற்பாடு செய்யாமல் மாநாட்டை நடத்தியதால் குடிக்க தண்ணீர்கூட கிடைக்காமல் மாநாட்டுக்கு வந்த பலர் மயக்கமடைந்தனர்.இஃப்தார் நிகழ்ச்சியிலும் எவ்வித முன் ஏற்பாடும் முறையாக செய்யாமல் விட்டதால் இங்கேயும் விபரீதங்கள் நடந்துள்ளது. இதுபோன்ற தேவையற்ற விபரீதங்கள் விஜய் நடத்தும் நிகழ்ச்சியில் நடப்பது தொடர் கதையாகிக் கொண்டுருக்கிறது.
எனவே, மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போன்று நடத்துவதாலும், மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாத வெளிநாட்டு பாதுகாவலர்களை வைத்துக் கொண்டு அலைவதாலும் இதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இனியொரு முறை இதுபோன்று நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பப்ளிசிட்டிக்காக நாங்கள் புகார் கொடுக்கவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.