காம்பவுண்ட் சுவர் பிரச்சினை: நடிகை த்ரிஷா தொடர்ந்த வழக்கில் சமரசம்
தனது வீட்டின் காம்பவுண்ட் சுவர் பிரச்சினை தொடர்பாக நடிகை த்ரிஷா தொடர்ந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. திரைப்பட நடிகையான த்ரிஷா, சென்னை செனடாப் ரோடு இரண்டாவது தெருவில் உள்ள தனது வீட்டின் கட்டிடத்தை பாதிக்கும் வகையில் பக்கத்து வீட்டுக்காரரான மெய்யப்பன் பொதுவான காம்பவுண்ட் சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்ள தடை கோரி உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம் அந்த காம்பவுண்ட் சுவரை இடிக்க கூடாது என இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நடிகை த்ரிஷா தரப்பிலும், எதிர் தரப்பிலும் சமரசம் ஏற்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து வழக்கை முடித்து வைத்த நீதிபதி, இந்த வழக்குக்காக நடிகை த்ரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பி அளிக்கவும் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டார்.