பிரபல பாலிவுட் நடிகர்களுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்..

பான் மசாலாவில் குங்குமப்பூ இருப்பதாகக் கூறி விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோருக்கு ஜெய்ப்பூர் நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகேந்திர சிங் படியல் (Yogendra Singh Badiyal) என்பவர் தாக்கல் செய்த மனுவில், பான் மசாலாவிற்காக செய்யப்படும் விளம்பரத்தில் பான் மசாலாவில் குங்குமப்பூ இருப்பதாக சொல்லப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.தற்போது ஒரு கிலோ குங்குமப்பூ 4 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 5 ரூபாய்க்கு விற்கப்படும் பான் மசாலாவில் குங்குமப்பூவின் நறுமணத்தைக் கூட சேர்க்க முடியாது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோர் விமல் பான் மசாலாவில் குங்குமப்பூ இருப்பதாகக் கூறி விளம்பரப்படுத்தி மக்களை குழப்பம் அடைய வைப்பதாகவும், இதனால் பான் மசாலா உற்பத்தியாளர் விமல் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தவறான தகவலைப் பரப்பி மக்களை ஏமாற்றும் விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் உற்பத்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கூறியுள்ளார். இந்த மனு நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய தலைவர் மீனா, ஹேமலதா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் மற்றும் ஜெ.பி.இண்டஸ்டீரிஸ் உரிமையாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதில், வரும் 19 ஆம் தேதி அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.