நாம் தமிழர் கட்சியோடு போட்டியிடுவது காலக்கொடுமை : திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம், மக்கள் ஆதரவும், வரவேற்பு உள்ளதாக திமுக வேட்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் இடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன், ராஜ்யசபா எம்பி அந்தியூர் செல்வராஜ், திமுக மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் இருந்தனர்..
ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கலுக்கு பின் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் பேட்டி அளித்தார். இந்தத் தேர்தல் வந்திருக்கவே கூடாத ஒரு தேர்தல். திமுக கூட்டணியில் 2021.ல் பெரியாரின் பேரனாக திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி, எதிர்பாராத விதமாக இயற்கை எய்திய பின், அவரது தந்தையார் EVKS இளங்கோவன் போட்டியிட்டு மிகப்பெரும் வெற்றி பெற்றார். உடல் நலக்குறைவால் அவரும் மறைவுற்ற பிறகு இந்த தேர்தல் வந்திருக்கிறது. இந்த இடைத்தேர்தல் வந்திருக்கக் கூடாது.
இடைத்தேர்தலில் EVKS இளங்கோவன் மற்றும் திருமகன் ஆகியோர் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்த அந்த பதவி காலத்தை எட்டும் முன்பாக இன்னும் ஒன்னேகால் ஆண்டுகள் இருக்கும் நிலையில் அவர்கள் மறைந்துள்ளனர். பல்வேறு நல திட்டங்கள் திமுக அரசு செய்துள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக தமிழ்நாட்டு மக்கள் திமுக வெற்றி பெற்று 2026 இல் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என எதிர்பார்த்து உள்ளனர்.
இந் நிலையில் மக்கள் நல திட்டங்களை முன்னிறுத்தி இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மிகப்பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வெற்றியை ஒட்டுமொத்த தமிழர்களும் திரும்பி பார்க்கும் வகையில் மாபெரும் வெற்றியை இந்த தொகுதி மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள். நிச்சயமாக மாபெரும் வெற்றியை இந்த தேர்தலில் பெறுவோம்.
திமுக மிகப்பெரிய அளவில் மக்களுக்கான திட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது நாங்கள் செல்கின்ற இடங்களில் எல்லாம் 200 சதவீதம் வெற்றி உதயசூரியன் வெற்றிபெறும் என சொல்லி வாழ்த்துகிறார்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்துக் கொண்டிருக்கிறார்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம் 33 வார்டுகளில் ஒன்பது வார்டுகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்திருக்கின்றோம் மிகப்பெரிய அளவில் மக்களின் ஆதரவு இருப்பதை கண்கூடாக பார்க்கிறோம். கிழக்கு தொகுதியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் முத்துசாமி மற்றும் மறைந்த ஈவிகேஸ் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றுவேன் என்றார்..
நாம்தமிழர் வேட்பாளர் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, பொய்யும் புரட்டும் பேசிக் கொண்டுள்ள அரசியல் வியாதிகளுக்கு பதில் சொல்ல தயாராக இல்லை. நவீன அறிவியல் வளர்ச்சியில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது ஆனால் கட்டை வண்டியில் போ என்று சொல்லக்கூடியவர்களை தலைவர்களாக வைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகின்றனர். அவர்களோடு போட்டியிடுவதெல்லாம் காலத்தின் கொடுமையாக கருதுகிறேன்.
ஈரோட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்னென்ன தேவை என்பது ஈரோட்டில் பிறந்து வளர்ந்து 13 வயது முதல் 45 ஆண்டு காலம் பொது வாழ்வில் உள்ள எனக்கு தெரியும். ஈரோட்டில் மக்களுக்கு தேவையானது தெரியும் அதற்கான அனைத்து திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
எங்கேயோ இருந்து வந்து கதை பேசி விட்டு எழுதிக் கொடுத்ததை பேசி விட்டு செல்பவர்களை கணக்கில் கொள்ள தேவையில்லை ஈரோட்டிற்கு தேவையான அனைத்தையும் தொலைநோக்கு சிந்தனையோடு திமுக முன்னெடுத்துச் செல்கிறது. அதுதான் எங்களின் பணி...என்றார்.