‘பேட் கேர்ள்’ படத்தை தொடரும் சர்ச்சைகள்..!

பேட் கேர்ள் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பம் வரவில்லை என தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீ.ஜே.அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட் கேர்ள். இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத்தின் இயக்கியுள்ளார். அமித் திரிவேதி இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் குறிப்பிட்ட சமூக பெண்களின் வாழ்க்கையைத் தவறாக சித்தரித்துள்ளதாக சில விமர்சனங்களும் எழுந்தது.
இதனிடையே இப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வென்றது. விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இப்படம் குறித்த ரிலீஸ் அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இந்த படத்துக்கு சென்சார் சான்று வழங்க கூடாது என ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர் ராமநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது குறிப்பிட்ட சமூகத்தையும், பெண்களையும் அவமதிக்கும் விதத்தில் bad girl திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது சட்ட விரோதமானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதற்கு பதிலளித்துள்ள தணிக்கை வாரியம் , பேட் கேர்ள் படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என்று கூறியுள்ளது. மனுதாரரின் கோரிக்கை சட்டப்படி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.