பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து.. இயக்குநர் மோகன்ஜி கைது

Mohan G

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குள்ளான கருத்தை கூறியதாக இயக்குநர் மோகன்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.இயக்குநர் மோகன் ஜி யை சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், திருச்சி அழைத்து வரப்படுவார் எனவும் மாவட்ட எஸ்.பி. வருண் குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சினிமா இயக்குநர் திரௌபதி மோகன் ஜி, தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை" என குற்றம் சாட்டியுள்ளார்.திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டதாக குறைகூறியுள்ள அவர், "கஞ்சா, கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இது மாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது" என பதிவிட்டுள்ளார்.

 

null


சமீபத்தில் திருப்பதி பிரசாதமான லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாக வந்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து திருப்பதி லட்டுவிற்கு நெய் விநியோகம் செய்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தை தொடர்பு படுத்தி பலரும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் பழனி தண்டாயுதபாணி கோயிலின் அறங்காவலர் குழுவில் இருப்பதை சுட்டிக்காட்டியும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.


இந்த சர்ச்சையைத் தொடர்ந்து இயக்குநர் மோகன்ஜி பழனி கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தில் கருக்கலைப்பு மருந்து இருப்பதாக ஆதாரமின்றி குற்றம் சாட்டியதாக திருச்சி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Share this story