சிம்புவின் ‘கொரானா குமார்’ படம் நிறுத்தமா ? - புதிய விளக்கம் அளித்த இயக்குனர் !

சிம்பு நடிப்பில் உருவாகவிருந்த ‘கொரானா குமார்’ படம் டிராப்பானதாக வெளியான தகவலுக்கு இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் கோகுல். ஜீவா நடிப்பில் உருவான ‘ரெளத்திரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் காமெடி கதைக்களங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
தற்போது ஆர்ஜே பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு முன்னர் சிம்புவை வைத்து ‘கொரானா குமார்’ படத்தை இயக்கவிருந்தார். ஆனால் சிம்புவின் கால்ஷீட் இல்லாததால் அந்த படத்தின் பணிகள் தொடங்கவில்லை. இதற்கிடையே இந்த படத்திலிருந்து சிம்பு விலகிவிட்டதாகவும், அதற்கு பதிலாக ‘லவ் டுடே’ இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. அதேநேரம் இப்படம் கைவிடப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தின் உண்மை நிலவரம் என்ன என்று இயக்குனர் கோகுல் தெரிவித்துள்ளார். அதில், ‘கொரானா குமார்’ படம் குறித்து ஏராளமான தகவல் வெளியாகி வருகிறது. அந்த படத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டதாலும், படம் டிராப்பாகி விட்டதாகவும் சொல்கிறார். ஆனால் இந்த விஷயங்கள் முழுக்க முழுக்க உண்மையில்லை. இந்த படம் டிராப்பாகவில்லை. கொரானா குமார் படத்தை யாராலும் நிறுத்தமுடியாது. கண்டிப்பாக படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவில்லை. யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து நானே விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறினார். இதனால் ‘கொரானா குமார்’ படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.