ரிலீஸிற்கு முன்பே பட்டையை கிளப்பும் 'ஜனநாயகன்' பட பிசினஸ்...!

vijay

விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகி வரும் ஜன நாயகன் வெளியாவதற்கு முன்பே தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம் என கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ளது. 

 தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ’ஜன நாயகன்’. இந்த படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். கடந்த ஆண்டு தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கிய விஜய், முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார். இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

விஜய்யின் கடைசி படம் என்பதால் ’ஜன நாயகன்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹெச். வினோத் இயக்கும் இப்படத்தை கேவின் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.’ஜன நாயகன்’ திரைப்படமானது 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 



இந்நிலையில் ’ஜன நாயகன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பெரும் தொகையான 55 கோடி ரூபாய்க்கு இப்படத்தை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே ’ஜன நாயகன்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசன் ப்ரைம் நிறுவனம் ரூ.121 கோடிக்கு  வாங்கியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது மேலும் ’ஜன நாயகன்’ திரைப்படம் இந்தியிலும் வெளியாவதால் அதனை கணக்கில் கொண்டு படம் வெளியாகி 8 வாரத்திற்கு பின்பே ஓடிடி வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

Share this story