புதிய சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ க்ளிம்ப்ஸ் வீடியோ..!!

 புதிய சாதனை படைத்த  ‘ஜனநாயகன்’ க்ளிம்ப்ஸ் வீடியோ..!!


நடிகர் விஜய்யின்  ‘ஜனநாயகன்’படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ  தமிழ் சினிமாவில் புதிய சாதனையை படைத்துள்ளது.  

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும்  ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய் உடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 2026 ஜனவரி 9ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று  தனது  51-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி  ஜன நாயகன்   திரைப்படத்திலிருந்து தி ஃபஸ்ட் ரோர் என்ற பெயரில் சிறப்பு வீடியோவை வெளியிட்டு விஜய்க்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது.  பிறந்தநாள் என்பதால் அந்த  ‘க்ளிம்ப்ஸ்’ வீடியோ நள்ளிரவில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து  போலீஸ் சீருடையில் விஜய் இருக்கும் போஸ்டர் ஒன்றையும் பிற்பகலில்  படக்குழு பகிர்ந்தது. அந்த  போஸ்டரில் காவல் சீருடையில் மிடுக்காக வந்து கவனம் ஈர்க்கிறார் விஜய்.  

Jananayagan

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ள விஜய்,  முழுநேர அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் இதுவே அவரது கடைசி படம் என விஜய் ஏற்கெனவே அறிவித்து விட்டார்.  விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால், அவரின் கடைசி திரைப்படம் எனக் கூறப்படுவதால் இந்தப்படம் ரசிகர்களிடையே  மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி விஜய்யின் இதுவரை அல்லாத உச்சபட்ச வியாபாரத்தை இப்படம் எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

வீடியோ வெளியானது முதலே ‘தி ஃபஸ்ட் ரோர்’ க்ளிம்ப்ஸ் வீடியோ அதிக வியூஸ்களை அள்ளிய நிலையில், தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனையையும் படைத்துள்ளது. அதாவது வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் 32.4 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. ஒரு க்ளிம்ப்ஸ் வீடியோ  24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற முதல் தமிழ் திரைப்படம் என்கிற சாதனையை ‘ஜனநாயகன்’ படைத்துள்ளதாக , கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 



 

Share this story