இசை அமைப்பாளர் தேவா கானா பாடல் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா ?
இசை அமைப்பாளரும், பாடகருமான தேவா, தன்னை தேடி வந்த நடிப்பு வாய்ப்புகளை மறுத்துவிட்டார். இந்நிலையில், கானா பாடல்களை தமிழ் படவுலகிற்கு கொண்டு வந்தது ஏன் என்பது பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘தமிழ் படவுலகில் நான் இசை அமைக்க வந்தபோது, இளையராஜாவின் கொடி வெற்றிகரமாக பறந்து கொண்டிருந்தது. அப்போது அறிமுகமான 28வது இசை அமைப்பாளர் நான். அதற்கு முன்பு வந்த 27 பேரால் நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால், நான் நின்றிருக்கிறேன் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை. இளையராஜாவுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார். இதற்கு நடுவில் நான் இசை அமைத்தபோது இளையராஜா சாயல் இருப்பதாகவும், வெஸ்டர்ன் கலந்தால் ஏ.ஆர்.ரஹ்மான் சாயல் இருப்பதாகவும் என்னை குற்றம் சாட்டி எழுதினார்கள். எனவே, இரண்டு ஜாம்பவான்களுக்கு மத்தியில் எனக்கென்று ஒரு முத்திரை வேண்டும் என்பதால், துணிச்சலுடன் கானா பாடலை கொண்டு வந்தேன்.
பள்ளிக்காலத்தில் பட்டினம்பாக்கம் ஏரியாவிலுள்ள நண்பர்களுடன் சேர்ந்து கானா பாடலை கற்றுக்கொண்டேன். அதை படத்தில் கொண்டு வர முயற்சித்தேன். முதலில் இப்பாடலை கேட்டுவிட்டு, என்ன பாடல் இது என்று, மற்ற இசை அமைப்பாளர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். இப்பாடலுக்கு ‘கானா’ என்ற பெயர் அப்போது கிடையாது. பிளாட்பார்ம் பாடல் என்று, எனது சிறுவயதில் சொல்வார்கள். எதுகை, மோனை கிடையாது. எது கையில் கிடைக்கிறதோ அதை வைத்து உருவாக்குவார்கள். இது சென்னையுடைய ஃபோக் சாங். கிராமத்தில் நாற்று நடும்போது ஒருவகை பாட்டு இருப்பது போல் சென்னையில் ஃபோக் சாங் இருக்கிறது. அதற்கு ‘கானா’ என்று பெயரிட்டேன். கானா என்றால், இந்தியில் பாட்டு என்று அர்த்தம். கானா பாடுவர்கள் மென்மையாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்களது குரலில் ரவுடித்தனம் கலந்திருக்கும்’ என்றார்..

