'வேட்டையன்' திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து கொண்டாடிய தனுஷ், அனிருத்!

vettaiyan

நடிகர் தனுஷ், அனிருத் மற்றும் ரஜினிகாந்த் குடும்பத்தினர் 'வேட்டையன்' திரைப்படத்தை சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டுகளித்தனர்.
 லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபத்தி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் இன்று (அக்.10) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வேட்டையன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. வேட்டையன் பட ரிலீஸை ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். வேட்டையன் திரைப்படத்தை ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் மகள்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சவுந்தர்யா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் தனுஷ் ஆகியோர் சென்னை ரோகிணி திரையரங்கில் பார்த்தனர்.


மேலும் அனிருத், திரையரங்கில் ரசிகர்களிடம் “தலைவர் குறி தப்பாது” என வசனம் பேச, ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ரஜினிகாந்தின் ரசிகரான தனுஷ், இன்று வேட்டையன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில், ”vettaiyan day, superstar thalaivar dharisanam” என பதிவிட்டார். மேலும் நடிகர் தனுஷ் பல்வேறு நேர்காணலில் தான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்டையன் திரைப்படம் ஜெயிலர் திரைப்படம் போல் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story