ஒரே கட்டமாக நடைபெறும் ஷூட்டிங்.. தனுஷின் ‘D50’ புதிய அப்டேட்

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டி50’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பன்முக திறமைக் கொண்டவர் நடிகர் தனுஷ். ‘பா.பாண்டி’ படத்திற்கு பிறகு தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்கு 500 வீடுகள் கொண்ட பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரே கட்டமாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் நிறைவுபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.