“சவால்களை சமாளிக்க உதவியது” - நன்றி தெரிவித்த தனுஷ்

dhanush

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் பல்வேறு சங்கங்கள் இணைந்து, கடந்த ஜூலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் பல்வேறு அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றினர். அதில் ஒன்றாக தனுஷ் இரண்டு தயாரிப்பாளர்களிடம் முன்பணம் வாங்கிவிட்டு கால்ஷீட் தராதது குறித்த ஆலோசிக்கப்பட்டு, இனிமேல் தனுஷை வைத்து தயாரிக்கவுள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினர். 

இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம், தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும் எங்களிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் கலந்தாலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்டனத்துக்குரியது என்றும் அறிக்கை வெளியிட்டனர். அதன் பிறகு சமீபத்தில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், தனுஷ் பிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர்கள் சங்கத்திடன் கூறியதாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் கார்த்தி பேசியிருந்தார். இதையடுத்து கடந்த 9ஆம் தேதி தனுஷ் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் பல்வேறு சங்கங்கள் இணைந்து, ஆலோசனை கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் தனுஷ் தரப்பு, வாங்கிய முன் பணத்திற்கு ஒரு தயாரிப்பாளரிடம் கால்ஷீட் தருவதாகவும் இன்னொரு தயாரிப்பாளருக்கு வட்டியுடன் பணத்தை தருவதாகவும் ஒப்புதல் அளித்துள்ளனர். இதையடுத்து தனுஷின் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு தர அனுமதி வழங்கியது. dhanush

இந்நிலையில் தனுஷ் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எனது தயாரிப்பாளர்களான தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் எழுப்பிய புகார்களை, தீர்க்க உதவிய தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் சரியான தலையீடு மற்றும் நேர்மையான வழிகாட்டுதல், எங்களை நோக்கிய சவால்களை சமாளிக்கவும் பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாட்டை அடையவும் எங்களுக்கு உதவியது. அதனால் கடந்த 11ஆம் தேதியன்று எங்கள் படப்பிடிப்பை மீண்டும் நல்லவிதமாக தொடங்க முடிந்தது. இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பது எங்களுக்கு உதவியது மட்டுமல்லாமல், தொழில்துறைக்கு நேர்மறையான முன்னுதாரணத்தையும் அமைத்துள்ளது. நம் நடிகர் சங்கம் முயற்சித்து வரும் பல சிறந்த திட்டங்களுக்கும் முன்னெடுப்புகளுக்கும் எனது மனமார்த்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளது.

Share this story