மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

dhanush

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தற்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அடுத்து, ‘இட்லி கடை’ படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார். இவர் 2018-ம் ஆண்டு ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார்.அடுத்து, ரூசோ சகோதரர்கள் இயக்கிய ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்தார். இவர்கள் இயக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது.

D
இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சோனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. இதில் அவர் ஜோடியாக அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’, ‘நைட் டீத்’, ‘மேடம் வெப்’, ‘ஈடன்’ என பல படங்களில் நடித்துள்ளார்.

இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இதுபற்றி தனுஷ் தரப்பில் விசாரித்தபோது, “விழா ஒன்றுக்காக தனுஷ் லண்டன் சென்றிருந்தார். அங்கு சோனி நிறுவன நிர்வாகிகளையும் சந்தித்தார். அவர்களுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இன்னும் ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாக வில்லை” என்று தெரிவித்தனர்.

Share this story