ஐசரி கணேஷ் தயாரிப்பில் 'போர் தொழில்' பட இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்!

dhanush

வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தில் தனுஷ், போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஐசரி கணேஷ். இவரது வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் மூலம் கோமாளி, வெந்து தணிந்தது காடு, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் சலூன், பி.டி.சார், ஜோஸ்வா இமைபோல் காக்க போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

வேல்ஸ் பள்ளி, பல்கலைககழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவரது தயாரிப்பில் ஜெயம் ரவி நடிக்கும் ஜெனி (Genie) என்ற படம் தற்போது உருவாகி வருகிறது. இந்நிலையில் இவரது தயாரிப்பில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதனை உறுதி செய்யும் விதமாக நேற்று நடந்த ஐசரி கணேசன் பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் கலந்து கொண்டார். அப்போது நடிகர் தனுஷ், திருமாவளவன் இருவரும் சந்தித்து‌ப் பேசினார். இந்நிலையில் வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை 'போர் தொழில்' படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் க்ரைம் த்ரில்லராக உருவான 'போர் தொழில்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது நடிப்பு மட்டுமின்றி இயக்குநராகவும் கலக்கி வருகிறார். நடிகர் தனுஷ் கடைசியாக தனது 50வது படமாக ராயனை தானே இயக்கி நடித்தார். அதனை தொடர்ந்து 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து 'இட்லி கடை' என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் குபேரா என்ற படத்திலும், இசையமைப்பாளர் இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து 'Tere ishk Mein' என்ற இந்தி படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story