தனுஷின் 'இட்லி கடை' படத்தை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்...!

தனுஷ் நடித்து, இயக்கிய "இட்லி கடை" திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தனுஷ் நடித்து, இயக்கிய "இட்லி கடை" திரைப்படத்தில் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், அருண் விஜய்,ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிரண் கௌஷிக் ஒளிப்பதிவாகவும், பிரசன்னா எடிட்டிங்காகவும் பணியாற்றியுள்ளனர். வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி பிசினஸ் மிகவும் மந்தமாக இருந்த நிலையில், முன்னணி நடிகர்களின் சில படங்களுக்கே ஓடிடி பிசினஸ் எளிதாக அமையவில்லை. ஆனால், இந்நிலையில் தனுஷின் "இட்லி கடை" திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.45 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.