தனுஷின் ‘இட்லி கடை’ - வெளியான அடுத்த அறிவிப்பு
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் தனுஷ், சமீபத்தில் தனது 50வது படமான ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இதையடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா, நாகர்ஜூனா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் தனுஷின் 51வது படமாக உருவாகி வருகிறது. இதனிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கும் இளையராஜா பயோ பிக்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படங்களை தவிர்த்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தையும் பாலிவுட்டில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில்‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.
இதனிடையே ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இதில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் ஆகியோர்களுடன் இணைந்து தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாராயணும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ...’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து கடந்த 18ஆம் தேதி டான் பிக்சர்ஸ்(Dawn Pictures) நிறுவனம் தனுஷின் 52வது திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்திருந்தது.
#D52 #DD4 Om Namashivaaya 🙏♥️ @RedGiantMovies_ @DawnPicturesOff @Aakashbaskarann @wunderbarfilms @theSreyas @gvprakash @editor_prasanna pic.twitter.com/o2QsS4FGOr
— Dhanush (@dhanushkraja) September 19, 2024
null
இந்த நிலையில் தனுஷின் 52வது திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்கவும் உள்ளார். இதன் மூலம் தனுஷ் நான்காவது படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். போஸ்டரை பார்க்கையில், படத்தின் தலைப்பிற்கேற்ப இட்லி கடை இடம்பெற்றிருக்க இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். மேலும் கிராமத்துப் பின்னணியில் இப்படம் உருவாகி வருவதாக தெரிகிறது. இப்படத்தில் நித்தியா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.