கவனம் ஈர்க்கும் தனுஷ் இயக்கத்தில் உருவான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ டிரெய்லர்

தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘பவர் பாண்டி’, ‘ராயன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் என இளம் நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
டிரெய்லரின் ஆரம்பத்திலும் இறுதியிலும் தனுஷ் தோன்றி படத்தை பற்றி சொல்கிறார். அதன் கதாநாயகனின் நண்பனாக வருகிற மேத்யூ தாமஸ் கதைக்களத்தைப் பற்றி கூற ஆரம்பிக்கிறார். படத்தின் தலைப்பின் கீழ் இடம்பெற்றது போல‘இது வழக்கமான காதல் கதை’ என டிரெய்லரிலும் சொல்கிறார்கள்.
ஆனால் இப்போதைய இளம் தலைமுறையான ஜென் Z இளைஞர்களின் வாழ்க்கையில் காதலும் காதல் தோல்வியும் என்னவாக இருக்கிறது என்பதை சொல்லும் படமாக இருக்கும் என டிரெய்லர் மூலம் தெரிகிறது. காதல், காதல் தோல்வி, நட்பு, பிடித்த வேலையை செய்யும் இளைஞன் என டிரெய்லர் முழுக்க ஜாலியாகவே நகர்கிறது. படமும் ஜாலியாகவே இருக்கும் என தனுஷ் சொல்லி டிரெய்லரை முடித்து வைக்கிறார்.இது இணையத்தில் வைரலாகி வருகிறது.