முடிவுக்கு வரும் தனுஷின் பஞ்சாயத்து!
நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருக்கும் தனுஷ் பட பஞ்சாயத்து முடிவுக்கு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் நடிகர்களின் சம்பள உயர்வு, ஓடிடி விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் பேசி முடிவுக்குக் வர வேண்டும். அதற்குப் பிறகே புதிய படங்களின் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதில் விஷால் மற்றும் தனுஷுக்கு ரெட் கார்டு எனவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருப்பவர் தேனாண்டாள் பிக்சர்ஸ் முரளி. இவருடைய தயாரிப்பில் நீண்ட வருடங்களுக்கு முன்பு தனுஷ் இயக்கத்தில் புதிய படமொன்று தொடங்கப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகு நிறுத்தப்பட்டது. சில படங்களின் தோல்வியால் தேனாண்டாள் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தினை தயாரிக்காமல் நிறுத்தியது.
இப்போது முன்னணி நடிகர் மற்றும் இயக்குநராக தனுஷ் வலம் வருவதால், மீண்டும் இந்தப் படத்தினை தொடங்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பல்வேறு படங்களில் நடித்து வருவதால் தேதிகள் கொடுக்க இயலாமல் இருந்தார் தனுஷ். இதனால், தனுஷிற்கு ரெட் கார்ட் என்று முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து தேனாண்டாள் நிறுவனம் மற்றும் தனுஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இயக்கிய கதை அல்லாமல் வேறொரு கதையை இயக்கி தருவதாக தனுஷ் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் அவர் மீதான பிரச்சினை முடிவுக்கு வருகிறது. இந்தப் பிரச்சினை நீண்ட மாதங்களாக பேச்சுவார்த்தை அளவிலேயே இருந்தது. இப்போது இது முடிவுக்கு வந்திருப்பதால் அடுத்தக் கூட்டத்தில் அதிகாரபூர்வமாக தனுஷுக்கு ரெட் கார்ட் நீக்கப்படும் என்று தெரிகிறது.