ரஜினி சாரை பார்க்க போறதுக்கு முன்னாடி காய்ச்சலே வந்துடுச்சு.. : நடிகை துஷாரா விஜயன்
அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் துஷாரா விஜயன், தமிழில் ஆர்யா ஜோடியாக சார்பட்டா பரம்பரை படத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் அவரது தங்கையாக மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் துஷாரா விஜயன். இதையடுத்து தற்போது விக்ரம் ஜோடியாக வீரதீர சூரன் படத்திலும் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் முக்கியமான ஒரு ரோலிலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ரஜினியுடன் தான் நடித்தது கனவு போல இருந்ததாக துஷாரா தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் முதல் காட்சியில் ரஜினியுடன் மறுநாள் நடிக்கவிருந்த சூழலில் முந்தைய நாள் தனக்கு காய்ச்சலே வந்து விட்டதாக கூறியுள்ளார். அவருடன் இணைந்து நடித்தது தனக்கு கனவு மாதிரி இருந்ததாகவும், ஒவ்வொரு நடிகருக்கும் ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும் என்றும் தனக்கு அந்த கனவு மிகச் சிறப்பான வகையில் நடந்து முடிந்துள்ளதாகவும் துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார். தான் அவருடன் இணைந்து நடித்ததை இன்னமும் தன்னால் நம்ப முடியவில்லை என்றும் துஷாரா தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து நடித்தது மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்ததாகவும் படத்தில் தனக்கு மிகவும் வெயிட்டான ரோல் என்றும் துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார். இதேபோல பகத் பாசில் மிகப்பெரிய நடிகர் என்றும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் வேட்டையன் படம் பெற்றுக் கொடுத்துள்ளதாக துஷாரா உற்சாகம் தெரிவித்துள்ளார்.