கவினின் டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆனதா? - ப்ளடி பெக்கர் விமர்சனம்

kavin

டாடா படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்து கவனம் பெற்ற நடிகர் கவின், அடுத்ததாக ‘ப்ளடி பெக்கர்’ படம் மூலம் அதே போன்று கவனம் பெற முயற்சி செய்திருக்கிறார். முந்தைய படங்கள் அவருக்கு கொடுத்த வரவேற்பை இந்த ‘ப்ளடி பெக்கர்’ படமும் பெற்றுக் கொடுத்ததா, இல்லையா?

பிச்சைக்காரனாக இருக்கும் கவின், மற்றவர்களை ஏமாற்றி பிச்சை எடுப்பதையே பிரதான தொழிலாக வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ஒரு அரண்மனையில் அன்னதானம் போடுவதாக சொல்லி அவரை அழைத்துச் செல்கின்றனர். போன இடத்தில் அரண்மனையை பார்த்து அசந்து போன அவர், யாருக்கும் தெரியாமல் அந்த அரண்மனைக்குள் போய் மறைந்து கொள்கிறார். அந்த நேரம் இவர் இருப்பது அறியாமல் அந்த அரண்மனையை பூட்டி விடுகின்றனர். உள்ளே மாட்டிக் கொள்ளும் அவர், அங்குள்ள அந்த அரண்மனையின் வாரிசுகள் இடையே நடக்கும் சொத்து தகராறில் சிக்கி கொள்கிறார். ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் கவினை, கொலை செய்ய அவர்கள் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து கவின் தப்பித்தாரா, இல்லையா? அவர்கள் ஏன் கவினை கொலை செய்ய துடிக்கின்றனர்? பூட்டிய அரண்மனையில் இருந்து கவின் வெளியே வந்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.kavin

இயக்குநர் நெல்சனின் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘ப்ளடி பெக்கர்’ என ஃபர்ஸ்ட் லுக்கில் வெளிவந்த டைட்டிலை பார்த்த போதே, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதிலும் குறிப்பாக, பிச்சைக்காரனாக நடிக்கும் கவினின் தோற்றம் வெளியான உடனேயே வைரலாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனாலேயே இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பும் நிலவியது. அந்த எதிர்பார்ப்பை, தற்போது வெளியான இத்திரைப்படம் பூர்த்தி செய்ததா, என்றால் அது சந்தேகம் தான்! கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்கிய இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார், கதையில் ஏனோ சற்றே கோட்டை விட்டு இருக்கிறார். படத்தில் பெரிதாக கதை என்ற ஒன்று அழுத்தமாக இல்லாமலும், அதே போல் திரைக்கதையும் அயர்ச்சியுடன் இருப்பது படத்திற்கு சற்று பாதகமாக அமைந்திருக்கிறது.
 
முதல் பாதி சுமாராகவும், இரண்டாம் பாதி சற்றே வேகம் எடுத்து இறுதி கட்ட காட்சிகளில் நிகழ்ச்சியாக முடிந்து ஓரளவுக்கு ரசிக்கக்கூடிய படமாக இப்படம் அமைந்திருக்கிறது. குறிப்பாக நெல்சன் ஸ்டைலில் டார்க் காமெடி படமாக, இதை உருவாக்க முயற்சி செய்த இயக்குனர் ஏனோ சில விஷயங்களை மிஸ் செய்திருப்பது படத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அதுவே படத்திற்கு மைனஸ் ஆகவும் அமைந்திருக்கிறது. இவர்கள் தேர்ந்தெடுத்த கதை கருவும், அதற்கான கதாபாத்திர தேர்வும், அதற்கான கதைக்களமும் சிறப்பாக அமைந்திருந்தாலும் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த படம் நம்மை கவர மறுக்கிறது. மற்ற விஷயங்களில் கவனம் செலுத்திய இயக்குனர் சிவபாலன், திரைக்கதையிலும் இன்னும் கூட கவனமாக இருந்திருக்கலாம். ஆனால் ஒரு அட்டெண்ப்டாக பார்க்கும் போது இது ஒரு நல்ல அட்டென்ப்ட் ஆகவே இருக்கிறது. 

 kavin
கவின் இந்த கதையை எப்படி தேர்வு செய்தார் என்று புரியவில்லை. நடிப்பில் என்ன வருமோ, அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோஅதை செவ்வன செய்து இருக்கிறார். பிச்சைக்காரனுக்கு உரித்தான தோற்றத்தில் சிறு சிறு நையாண்டிகளை புகுத்தி சில இடங்களில் ரசிக்கவும் பல இடங்களில் சோதிக்கவும் வைத்துள்ளார். இவரின் டெடிகேஷன் சற்றே சிறப்பாக இருந்தாலும், இப்படத்தின் கதை ஒன்றும் இல்லாததால் அவை அனைத்தும் தேவையற்று போய்விடுகிறது. மற்றபடி படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் நெல்சன் படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் நடிகர்கள். அவர்கள் அனைவருமே பார்த்தாலே சிரிப்பு வரும் தோற்றத்தில் இருக்கின்றனர். மற்றபடி காமெடி காட்சிகளில் அதே சிரிப்பை கொடுக்க முயற்சி செய்திருக்கின்றனர். இதில் தெரிந்த முகமான ரெடின் கிங்ஸ்லி மட்டும் சற்றே கவனம் பெறுகிறார். கவினுடன் நடித்திருக்கும் அந்த சிறுவன் மிகச் சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இவரின் எதார்த்தமான நடிப்பு, படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஜென் மார்ட்டின் இசையில் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. சுஜித் சாரங் ஒளிப்பதிவில் படம் ஒரே அரண்மனையில் எடுத்திருந்தாலும் பிரம்மாண்டமாக தெரிகிறது. 

ஒரு ஷார்ட் பிலிமுக்கு எந்த அளவு கதை தேவையோ அதே அளவு கதையை வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேர திரைப்படமாக கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர், திரைக்கதைக்கு இன்னமும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

Share this story