இயக்குநர் ஷங்கரின் பேச்சு வருத்தம் அளிக்கிறது : இயக்குநர் அனுராக் காஷ்யப்

anurag kasyap

தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஷங்கர், "கேம் சேஞ்சர் திரைப்படத்தை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போலத்தான் எடுத்துள்ளேன். இன்றைய இளைஞர்களுக்கு இன்ஸ்டா கொடுக்கும் சுவாரஸ்யத்துக்கு இணையாக கேம் சேஞ்சர் உருவாக்கப்பட்டுள்ளது" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இயக்குநர் ஷங்கரின் பேச்சு வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அனுராக், "ஷங்கர் போன்ற ஜாம்பவான் இயக்குநர்கள் இப்படி பேசுவது வருத்தத்தைத் தருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்போல படத்தை எடுத்திருக்கிறேன் என்றால் ரசிகர்களின் தேவைக்காக இயக்குநர் தன்னை மாற்றிக் கொண்டதாகிவிடும்.

anurag

நல்ல உணவை பரிமாறுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, அற்புதமாக சமைத்துக் கொடுப்பது. இரண்டு, பரிமாறுபவராக இருந்து கேட்கும் உணவை பரிமாறுவது. இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு." எனத் தெரிவித்துள்ளார். இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான `இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். 'லியோ' படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மகாராஜா படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'ரைபில் கிளப். படத்திலும் நடித்துள்ளார்
 

Share this story