உங்களுக்கு மில்லியன் நன்றிகள்... மிஷ்கின் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி பதிவு !

leo

இயக்குனர் மிஷ்கின் குறித்து லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘லியோ’. விஜய்யின் மிரட்டலான நடிப்பில் உருவாகும் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ஆயுதப்பூஜையையொட்டி வெளியாகவிருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்திற்கான படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் மிஷ்கின், தனது பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், - 12 டிகிரியில் 500 பேர் கொண்ட படக்குழுவினர் கடுமையான உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு மிகச் சிறப்பான சண்டை காட்சி ஒன்றை படமாக்கினார். உதவி இயக்குனர்களின் ஓயாத உழைப்பும் என் மீது செலுத்திய அன்பும் ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு தொழிலாளியை போல் உழைத்துக் கொண்டிருக்கிறார். 

leo

என் லோகேஷ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனராக அன்பாகவும் கண்டிப்பாகவும் ஒத்த சிந்தனையுடன் ஒரு போர் வீரனை போல் செயல்பட்டு வருகிறார். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான். நான் அவன் நெற்றியில் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன் என்று கூறியிருந்தார். 

leo

இந்த பதிவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்குனர் லோகேஷ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், உங்களுடன் இணைந்து பணியாற்றியதற்கான வாய்ப்பை பெற்றதற்கு நான் நன்றி உள்ளவனாகவும், அதிர்ஷ்டம் செய்தவனாகவும் உணர்கிறேன். இதற்காக  எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது. இருந்தாலும் மில்லியன் நன்றிகள் சார். நீங்கள் படப்பிடிப்பில் இருந்த தருணம் அற்புதமானதாக இருந்தது என்று கூறியுள்ளார். 


 

Share this story