“மன்னிப்பு கேட்டு விளம்பரம் செய்ய வேண்டும்” - இயக்குநர் மோகனுக்கு உத்தரவு

mohan G


இயக்குநர் மோகன் ஜி தனியார் ஊடகத்தில், “நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாகத் தான் செவி வழியாக வந்த செய்தியை கேள்விப்பட்டேன்” எனப் பேசி இருந்தார். 


இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலக மோகன் ஜி. மீது திருச்சி சமயபுரம் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறையில் மேலாளராக பணிபுரியும் கவியரசு என்பவர் திருச்சி மாவட்ட காவல் துறையில் புகார் கொடுத்தார். அவர், பழனி கோயில் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக உண்மைக்கு புறம்பான விமர்சனத்தை மோகன் ஜி. கூறியுள்ளதாகவும் திருப்பதி லட்டு விவகாரம் அடங்குவதற்குள் தமிழக மக்களிடையே மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பொய்யான செய்தியை பரப்பியுள்ளதாகவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலிசார் சென்னை சென்று மோகன் ஜி-யை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். பின்பு திருச்சிக்கு அழைத்து சென்ற அவரை காவல்துறையினர் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து அவர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். 

இதையடுத்து இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எந்த ஒரு அவதூறான செய்தியை பரப்பவில்லை என்றும் செவி வழியாக கேட்ட செய்தியைத்தான் தெரிவித்திருந்தேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்துள்ளது. மனுவை விசாரித்த அவர் மோகனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் மனுதாரர் வாய் சொல் வீரராக மட்டும் இல்லாமல் எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன்பு உறுதிப்படுத்த வேண்டும். உண்மையிலே பழனி கோயில் மீது அக்கறை இருந்தால் கோயில் தூய்மை பணியை மேற்கொள்ளலாம். அல்லது பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்திற்குச் சென்று 10 நாட்கள் சேவை நோக்கில் பணியாற்றலாம். எந்த யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்தாரோ? அதே யூடியூப் சேனலில் வருத்தம் தெரிவித்து பேட்டி கொடுக்க வேண்டும். மேலும் தமிழ், ஆங்கில நாளிதழில் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்து உத்தரவிட்டார்.  

Share this story