‘சலார் 2’ குறித்து அப்டேட் கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீல்

prasanth neel

எனது சிறந்த படைப்புகளில் ஒன்றாக ‘சலார் 2’ இருக்கும் என்று இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘சலார்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால் ‘சலார் 2’ படப்பிடிப்பு தாமதமானது. இதனிடையே, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார் பிரசாந்த் நீல். தற்போது ‘சலார்’ வெளியாகி ஓர் ஆண்டு ஆனதை முன்னிட்டு, பிரசாந்த் நீலின் வீடியோ பேட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது ஹோம்பாளே பிலிம்ஸ். இதில் ‘சலார்’ முதல் பாகம், இரண்டாம் பாகம் குறித்து பேசியிருக்கிறார் பிரசாந்த் நீல்.

அதில், “’சலார்’ முதல் பாகம் படத்தின் வரவேற்பில் எனக்கு முழு திருப்தி இல்லை. ‘சலார் 2’ படத்தை சிறந்த படங்களில் ஒன்றாக மாற்ற முடிவு செய்திருக்கிறேன். ‘சலார் 2’-ல் என்னுடைய எழுத்து அநேகமாக எனது சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கலாம். நான் கற்பனை செய்வதை விடவும், பார்வையாளர்கள் கற்பனை செய்வதை விடவும் அதிகமாக நான் அதை ஈடுசெய்யப் போகிறேன்.


என் வாழ்க்கையில் மிகச் சில விஷயங்களில் நான் உறுதியாக இருக்கிறேன். ‘சலார் 2’ என்பது சந்தேகத்துக்கு இடமின்றி எனது சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் பிரசாந்த் நீல். இதன் மூலம் ‘சலார்’ முதல் பாகம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. அதே வேளையில், ‘சலார் 2’ விரைவில் தொடங்கவிருப்பதும் உறுதியாகி இருக்கிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.

Share this story