“ சப்தம் படத்தில் புதிய முயற்சி...” : இயக்குனர் ஷங்கர் பாராட்டு

shankar

இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள சப்தம் படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.  

ஈரம் படத்திற்கு பின் இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் சப்தம். 7ஜி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள சப்தம் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் மார்ச் 1 ஆம் தேதி வெளியானது. ஈரம் படத்தில் தண்ணீரை மையமாக வைத்தது போல் இப்படத்தில் ஹாரர் ஜானரில் ஒலியை வைத்து முயற்சி செய்துள்ளனர் . 


ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இப்படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு ஹாரர் படத்தில் ஒலியை அடிப்படையாகக் கொண்ட புதிய முயற்சியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அறிவழகனின் டெக்னிக்கல் விஷயமும் விறுவிறுப்பான கதை சொல்லலும் குறிப்பிட வேண்டிய ஒன்று. 

இடைவெளிக்கு முன்பு ஒலியை வைத்து வரும் காட்சி எதிர்பாராதவிதமாக இருந்தது. உதயகுமாரின் மிக்ஸ், ஆதியின் ஸ்கிரீன் ப்ரெசன்ஸ், தமனின் இசை அனைத்தும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது” எனக் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் அறிவழகன் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். இவரது முதல் படமான ஈரம் படத்தை ஷங்கர்தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Share this story