இயக்குனர் ஷங்கரின் ’கேம் சேஞ்சர்’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்..!

shankar

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்பட தமிழ்நாடு வெளியீட்டிற்கு ரெட் கார்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’ (Game changer). தமன் இசையமைத்துள்ள ’கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.shankar

தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் ரா மச்சா மச்சா, DHOP ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ராம் சரண் தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, வில்லன் கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் பட வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெட் கார்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'இந்தியன் 2' திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் ‘இந்தியன் 2’, இப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்று, வணிக ரீதியாகவும் பெரிய அளவில் வசூலை பெறவில்லை.


இந்நிலையில் 'இந்தியன் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீதம் உள்ளதாக தெரிகிறது. கேம் சேஞ்சர் பட வெளியீட்டிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டிற்கு ரெட் கார்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் 3 திரைப்படத்தை முடித்துவிட்டு கேம் சேஞ்சர் படத்தை வெளியிட வேண்டும் என தமிழ் திரைத்துறையினரிடம் முறையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதனைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் தரப்பில் இருந்து கேம் சேஞ்சர் படத்திற்கு பிறகு இந்தியன் 3 திரைப்படத்தின் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கேம் சேஞ்சர் படத்திற்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இன்னும் முழுவீச்சில் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த விடாமுயற்சி திரைப்பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கேம் சேஞ்சர் படத்திற்கு ரெட் கார்ட் போடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

Share this story