'அந்தகன்' ரீமேக் அல்ல ரீமேட் (Remade) படம்: தியாகராஜன்

இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் பிரஷாந்த் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். ரிலீசுக்கு தயாராகி சில ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி ‘அந்தகன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்த்தை படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், ’அந்தகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள அந்தகன் Anthem பாடல் வெளியானது. படத்தின் ப்ரோமோ பாடல் பாடலை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன்போது இயக்குநர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த், இயக்குநர் - நடிகர் கே .எஸ். ரவிக்குமார், நடிகை ஊர்வசி, நடிகை பிரியா ஆனந்த், நடிகை வனிதா விஜயகுமார், நடிகர்கள் பூவையார், பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா, மோகன் வைத்யா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் படத்தின் இயக்குநரான தியாகராஜன் பேசுகையில், ''2019ம் ஆண்டில் பலத்த போட்டிகளுக்கு இடையே இந்தியில் வெளியான 'அந்தாதூன்' படத்தின் தமிழ் உரிமையை வாங்கினேன். தமிழ் திரையுலகில் பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் இப்படத்தின் தமிழ் உரிமையை வாங்குவதற்கு போட்டியிட்டார்கள்.
இந்தப் படத்தை ஏன் வாங்க வேண்டும் என தோன்றியது என்றால், அதில் ஒரு பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளி தான் கதையின் நாயகன். அவன் ஒரு பியானோ வாசிக்கும் இசை கலைஞன். பிரசாந்த் சிறிய வயதிலிருந்து பியானோ வாசிப்பான், லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் பியானோ இசையில் நான்காவது கிரேடில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். அவனுக்கு இந்த கதை மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து தான் இதன் தமிழ் உரிமையை வாங்கினேன்.
படத்தை வாங்கிய பிறகு கொரோனாவால் இரண்டு ஆண்டு காலம் சென்றது. அதன் பிறகு இடர்பாடுகள் ஏற்பட்டதன. அதனைத் தொடர்ந்து நான் படத்தை இயக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நட்சத்திர நடிகர்களை தேர்வு செய்தோம். குறிப்பாக இதில் ஒரு டாக்டர் கேரக்டர் இருக்கிறது. அந்த கேரக்டருக்கு இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தில் அவருடைய பங்களிப்பு அதிகம். திறமையான நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை அவர் மெருகேற்றி இருக்கிறார்.
இந்தி பதிப்பில் இல்லாத பல விஷயங்களை தமிழ் ரசிகர்களை மனதில் வைத்து இணைத்திருக்கிறோம். அதனால் அந்தகன் ரீமேக் படம் அல்ல ரீமேட் படம். அதாவது மறு உருவாக்கம் செய்யப்பட்ட படைப்பு. அந்தகன் திரைப்படம் ரசிகர்களுக்காக புதுமையாகவும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் உச்சகட்ட காட்சி பெரும் விவாதத்தை ஏற்படுத்தும். இது ரசிகர்களை மீண்டும் திரையரங்கத்திற்கு வரவழைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியான பிறகு இந்தியில் வெளியான அந்தாதூன் திரைப்படத்திற்கும், தமிழில் வெளியாகி இருக்கும் அந்தகன் படத்திற்கும் இடையேயான வித்தியாசத்தை உணர்வீர்கள். இந்தியில் இல்லாத பல விஷயங்களை நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறோம். அதிலும் அந்தகன் திரைப்படம் பிரசாந்தின் ஐம்பதாவது திரைப்படம் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் வழங்கியிருக்கிறோம். இந்தத் திரைப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்,,'' என்றார்.