இயக்குனர்கள் ராஜமவுலி - ராஜ்குமார் ஹிரானி இடையே வலுக்கும் மோதல்..? என்ன காரணம்...

‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தை எடுப்பதற்கு இயக்குநர்கள் ராஜமவுலி, ராஜ்குமார் ஹிரானி இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு ஆமிர்கான் – ராஜ்குமார் ஹிரானி இருவரும் இணைந்து படம் தொடங்க இருப்பதாக செய்தி வெளியானது. ‘3 இடியட்ஸ்’ மற்றும் ‘பி.கே’ என இரண்டு பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த கூட்டணி என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.இதனிடையே, ராஜமவுலி மற்றும் அவரது மகன் கார்த்திகேயா இணைந்து ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கையை பின்னணியாக கொண்டு படம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தக் கதையைக் கேட்டுவிட்டு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான செய்தியும் வெளியாகிவிட்டது.
தற்போது, ராஜ்குமார் ஹிரானி – ஆமிர்கான் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தாதா சாகிப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டது எனவும், அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரேசமயத்தில் இரண்டு பெரும் இயக்குநர்கள் ‘தாதா சாகிப் பால்கே’ பயோபிக் படத்தை உருவாக்க இருக்கிறார்கள். இரண்டிலுமே முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள். யார் முதலில் என்பதில்தான் இப்போது போட்டியே இருக்கிறது. இதில் ராஜ்குமார் ஹிரானி முதல் நபராக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.