வறுமையில் சிக்கி தவிக்கும் டிஸ்கோ சாந்தி... பலர் தன்னை ஏமாற்றியதாக கண்ணீர் பேட்டி !

பிரபல நடிகையான டிஸ்கோ சாந்தி வறுமையில் சிக்கி தவித்து வருவதாக கண்ணீர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் டிஸ்கோ நடனம் மூலம் பிரபலமானவர் நடிகை டிஸ்கோ சாந்தி. பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகளான அவர், 80-ஸ் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். அவரது கவர்ச்சி நடனத்தில் வெளியான பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தது. சினிமாவில் வாய்ப்பு குறைந்தபோது தெலுங்கு நடிகர் ஸ்ரீ ஹரியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதனால் ஐதராபாத்திலும் செட்டிலாகி வசித்து வந்தார்.
இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஸ்ரீ ஹரி காலமாகிவிட்டார். கணவர் உயிரிழந்ததால் குடும்ப பொறுப்புகளை கவனித்து வந்த டிஸ்கோ சாந்தி, தற்போது வறுமையின் பிடியில் இருந்து வருகிறார். இது குறித்து தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், எந்த வருமானமும் இன்றி தற்போது வசித்து வருவதாகவும், இரண்டு வீடுகளில் வரும் வாடகையை வைத்துதான் குடும்பத்தை ஓட்டி வருவதாகவும் கண்ணீர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், என் கணவர் உயிரோடு இருக்கும் நிறைய பேருக்கு பணம் கொடுத்திருந்தார். ஆனால் அவர் இறந்த பிறகு நாங்கள் பணம் கொடுத்த யாரும் வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. தவணை கட்ட முடியாததால் காரை கூட வங்கி எடுத்துச் சென்றுவிட்டது. இப்போது தாலி மட்டுமே மிச்சமிருக்கிறது. சினிமாவில் இருப்பவர்கள் எங்களை உயிரோடு இருக்கிறோமா என்று கூட பார்க்கவில்லை என்று கூறினார்.