‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்’ சீசன் 4 டைட்டில் வின்னர் ஆனார் திவினேஷ்...!

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 டைட்டில் ஆனார் திவினேஷ்...!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான ZEE தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான இசை நிகழ்ச்சி சரிகமப. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஜூனியர்களுக்கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 கோலாகலமாக தொடங்கி உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்து ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டப் போட்டியான கிராண்ட் பினாலே மே 11 மாலை 4:30 மணி முதல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இருந்து நேரலையில் ஒளிபரப்பானது. சிவகார்த்திகேயன், சந்தானம், ஆர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, தினேஷ், அபினேஷ் மற்றும் மகதி என ஆறு போட்டியாளர்கள் இந்த இறுதி போட்டியில் மோதிக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மக்களின் ஓட்டுக்கள் மற்றும் நடுவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளர் திவினேஷ் இந்த சீசனின் வெற்றியாளராக வெற்றி மகுடத்தை வென்றார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற போட்டியாளருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
திவினேஷை தொடர்ந்து முதல் ரன்னராக யோகஸ்ரீ மற்றும் இரண்டாவது ரன்னராக ஹேமித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் திவினேஷ்க்கு மெல்லிசை இளவரசர் என்ற விருதையும் வழங்கி ZEE தமிழ் கௌரவித்துள்ளது.அர்ச்சனா இந்த ZEE தமிழ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஸ்ரீநிவாஸ், எஸ்பிபி சரண், சைந்தவி மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் இந்த சீசனின் நடுவர்களாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.