விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி..

விவாகரத்து கோரிய வழக்கில் ரவி மோகன், ஆர்த்தி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
‘ஜெயம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவி மோகன். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அண்மையில் மனைவியிடமிருந்து பிரிவதாக நடிகர் ரவி மோகன் தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தார். தொடர்ந்து மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி மோகன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த 3-வது குடும்ப நல நீதிமன்றம், இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி சுமுக பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, மத்தியஸ்தர் முன்னிலையில் ரவியும், ஆர்த்தியும் பலமுறை ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவாகரத்து கோரிய வழக்கில் ரவி, மோகன் ஆர்த்தி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இந்த வழக்கை சென்னை 3வது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி விசாரித்தார். அப்போது, தனக்கு ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்பதற்கான விளக்கத்துடன் நடிகர் ரவி மோகன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆர்த்தி தரப்பில், மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக நடிகர் ரவி மோகன் வழங்க வேண்டும் கோரிக்கையுடன் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது. இந்த இருவரது மனுக்களுக்கு ரவி மோகன், ஆர்த்தி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். முன்னதாக ரவி மோகனும் தானும் பிரிவதற்கு 3-வது நபரே காரணம் என ஆர்த்தி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், உரிய உத்தரவு வரும் வரை அவரது மனைவியாகவே தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.